உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் – 85 பேர் தடுத்து வைத்து விசாரணை
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று (21 திகதி) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகித்து கைது செய்யப்பட்ட 85 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர நேற்று தெரிவித்தார்.
இவர்களில் சஹ்ரானின் மனைவியும் உள்ளடங்குகின்றார். இவர்களில் எட்டு பெண்கள் உட்பட 65 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரினாலும் இரண்டு பெண்கள் உட்பட 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினாலும் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே பயங்கரவாதிகள் பயன்படுத்திய பின்வரும் மறைவிடங்களும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பயிற்சி நிலையங்களையும் கண்டுப்பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலானாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தலைமையில் இந்த பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவித்த அவர், பயங்கரவாதிகளுக்கு உதவிய ஒருசிலர் மாத்திரமே தேடி கைது செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.