உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்திக்கு இன்று (திங்கட்கிழமை) லக்னோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சோனியா காந்தி, ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23 ஆம் திகதி ராகுல் அறிவித்தார்.

பிரியங்கா உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏனைய 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் இன்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர்.

இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதி ராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது, காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

லக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ‘நேரு பவன்’ நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். பேரணி செல்லும் பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பதாகைகள் வைக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !