உடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு தயாராவதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் இதுவரை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில், உடன்பாடற்ற பிரெக்சிற்றிக்கு தயாராவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைமைப் பேச்சாளர் Margaritis Schinas இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் தொடர்பாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல உண்டென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியருக்கும் பிரித்தானிய பிரெக்சிற் பேச்சாளர் டொமினிக் ராப்பிற்கும் இடையில் நேற்று முன்தினம் பிரசல்ஸில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன் பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாளை நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மாநாடு தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லையென்றும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்குபற்றும் மாநாடு நாளை நடைபெறவுள்ளதோடு, இதில் பிரெக்சிற் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !