உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி
உக்ரேன் ஜனாதிபதி தேர்தலில் பிரபல நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (வயது-41) வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73 சதவீத பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ 25 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.
பிரபல தொழிலதிபரான ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவிற்கு உக்ரேனில் அமோக செல்வாக்கு உள்ளது. எனினும், அரசியலில் எவ்வித அனுபவமும் இல்லாத வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தேர்தல் களத்தில் பொரொஷென்கோவுக்கு சவாலாக காணப்பட்டார்.
கடந்த மாதம் 31ஆம் திகதி நடத்தப்பட்ட முதற்கட்ட வாக்கெடுப்பிலும் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி முன்னிலைப் பெற்றிருந்தார். இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் வெற்றியை வொலொடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்தமாதம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து வொலொடிமிர் ஸெலென்ஸ்கி ஜனாதிபதியாக பதவியேற்பார்.