Main Menu

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன்

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று (26.02.2017) பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

மதுரை சோமு அவர்கள் தெய்வம் திரைப்படத்தில் பாடிய   “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.

எண்பதுகளின் இறுதியில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.

போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.

கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ். ஜி. சாந்தன் ((குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.

இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் முகத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்

கலைஞர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள் – மதுரக் குரலோன் சாந்தன்

“கலைஞன் எல்லோருக்கும் சொந்தக்காரன் அவன், இவர், இவருக்குரியவன் என சுட்டுவது தவறானது. கலைத்துறை ரம்மியமானது. இதில் போட்டியிருக்கலாம். அது பொறாமையாக மாறிவிடக்கூடாது. பொறாமை ஏற்பட்டால் எமது அடுத்த சந்ததி வளர முடியாத நிலைமை ஏற்படும். நம் நாட்டுக் கலைஞர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுவே எமது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கான ஆதாரம்” இவ்வாறு தனது கணீரென்ற மதுரக்குரலால் தற்கருத்தை முன்வைத்தார் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன்.

கே: உங்களைப் பற்றி முதலில்…

எனது அப்பாவுக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அத்துடன் எங்களுக்குச் சொந்தமாக ஒரு அறையும் இருந்தது.

யாழில் எங்களுக்கு பாடசாலை விடுமுறை கொடுத்ததும் நாங்கள் கொழும்புக்கு போய் அப்பாவுடன் நிற்போம். இப்படி ஒருமுறை கொழும்பில் நிற்கும் பொழுது செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது இதனை பார்க்கச் சென்றிருந்தேன் அப்போது அங்கு பாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை பாடினேன். பாடி முடிந்ததும் நல்ல கைதட்டல் கிடைத்தது. இதனையே நான் எனது ஆரம்பமாக கருதுகிறேன். இது 1972 இல் நடந்தது. அதுதான் எனது முதல் மேடை அனுபவம். அதன் பின் நான் வீதியில் சென்றாலும் என்னை அழைத்து தம்பி அந்த “மருதமலைப் பாடலை” பாடு என்பார்கள் நானும் பாடுவேன்.

இந்நிலையில் அந்தத் தெருவில் பழம் சாப்பிடவரும் முகத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் என்னை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அப்போது சிறுவர் மலரை பத்மநாதன் மாமா என்பவரே நடத்தி வந்தார். தொடர்ந்து இந்த வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடித்தேன்.

கே: இதன் பின்னர் உங்களது மேடை இசைத்துறை பயணம் எவ்வாறு இருந்தது?

இப்போது இருக்கும் அப்சராஸ் இசை குழுவை ஆரம்பிக்கும் முன் சித்ராலயா என்ற இசைக் குழுவை செல்லத்துரை அண்ணன் ஆரம்பித்தார். அவர் தற்போது கொழும்பில் பாடுகிறார் என நினைக்கிறேன். அந்த நேரம் நான் சித்ராலயாவில் பாட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஓரளவு தாளம், சுருதி என்பவற்றை முதலில் சொல்லித்தந்த மனிதர் என்றால் அது செல்லத்துரை அண்ணன் தான். அவரை என்னால் மறக்க முடியாது.

அவர் துணிந்து மேடை ஏறியதால் தான் என்னை அறியாமலே இந்த இசை துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தேன்.

முத்துசாமி மாஸ்டரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் காண்பேன். என்னைத் தட்டிக் கொடுப்பார். நாராயணன் என்ற சங்கீத வித்துவானும் பாடு எனத் தட்டிக் கொடுத்தார். இவ்வாறாக எனது பயணம் தொடர்ந்தது.

கே: இந்நிலையில் நீங்கள் கொழும்பிலிருந்து இடம்பெயர நேர்ந்தது ஏன்?

எனது அப்பாவின் கடை நஷ்டமாகி விடவே அவர் 1977 ஆம் ஆண்டு கிளிநொச்சி வந்தார் நாம் 1979இல் கிளிநொச்சி வந்து ஆர்மோனியத்தோட பாட ஆரம்பித்த நான், 1981 ஆம் ஆண்டு கண்ணன் கோஷ்டியில் சேர்ந்து பாட ஆரம்பித்தேன்.

எனினும் என்ன பிரச்சினையோ 1982 ஆம் ஆண்டு கண்ணன் மாஸ்டர் இசைக் குழுவை நடத்துவதை கைவிட்டார். இந்நிலையில் நான் “சாந்தன் இசை குழு” என்ற ஒரு மெல்லிசை இசைக் குழுவை ஆரம்பித்து பாடிவந்தேன். அப்படியே வாழ்வு வேறொரு கட்டமைப்புக்குள் வந்தது. அங்கு பாடிய நான் மீண்டும் பக்திப் பாடல், சினிமாப் பாடல் என பரிமாணம்… பாட வந்துவிட்டேன்.

கே: மேடை நிகழ்ச்சிகளில் எவ்வாறான பாடல்களை இப்போது பாடி வருகிறீர்கள்?

இடைக்காலம் சினிமாப் பாடல்களைப் பாடுவதை, விட்டு தத்துவபாடல்களையும் பக்திப் பாடல்களையும் பாடுகின்றேன். பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் பாடல் கேட்டிருக்கிறீர்களா அதுதான் என்னை பிரபல்யப்படுத்தியது. இது மட்டுமின்றி முத்துவிநாயகர், ஆதிகோவில் என்பவற்றுக்கு பாடி வருகிறேன்.

எனக்கு பக்திப் பாடல் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆத்ம திருப்திக்காக பாடும் பாடல்கள் என்றால் அது பக்திப்பாடல் தான்.

கே: சமகால சினிமாப் பாடல்களைத் தாங்கள் பாடுவதில்லையா?

தற்போது எனக்கு சினிமாப் பாடல்களை பாடமுடியாது என்றல்ல, பாட முடியும். இருந்தாலும் கருத்து மிக்க பழைய பாடல்களையும், இடைக்காலப் பாடல்களையும் பாடுகிறேன். புதிய பாடல்களை தற்போது எனது பிள்ளைகள் பாடுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் விலகி நின்று இடமளிக்கின்றோம்.

கே: அன்றைய பாடல்களுக்கும் இன்றையப் பாடல்களுக்கும் இடையிலுள்ள இசை வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பழைய பாடல்கள் பாடல்கள் இசை என்பன மனதில் நிலைத்து நிற்க கூடியவை இதனை உருவாக்க இசையமைப்பாளர்கள் அதிக நேரத்தை பயன்படுத்தினர். ஆனால் இப்போது இசைக் கருவிகள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால் பாடல்களை உருவாக்குவது வேகம் பெற்றுள்ளது. வசன அமைப்புக்கள் மெல்ல பின் தள்ளப்பட்டு இசைக் கருவிக்கு முதலிடம் வழங்கப்படுவதாக நான் கருதுகிறேன்.

கே: இசைத்துறையில் உங்களுடைய சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

“கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” இது குறித்து நாங்கள் யாரோடும் போட்டி போட முடியாது.

ஏனென்றால் இசை என்பது சத்திரத்திற்கு ஒப்பானது இதன் அடி நுனியை காண்பது என்பது இலகுவானது அல்ல என்னைவிட மற்றவன் திறமைகளையே நான் சாதனையாகக் கருதுகிறேன். அவரவரது திறமைகளை சாதனைகளை இரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.

இருப்பினும் நாங்கள் செய்யும் தொழிலை சுத்தமாக செய்வதற்கு முனைய வேண்டுமே தவிர, யாரோடும் போட்டி போடுவது அல்லது பொறாமைப்படுவதும் முறையல்ல.

கே: இத்துறையில் போட்டி மனப்பான்மை இருப்பது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

போட்டி இருக்க வேண்டும் ஆனால் அது பொறாமையாக மாறக் கூடாது. மாறினால் அடுத்த சந்ததி வளராமல் அழிந்து போகும் நிலை ஏற்படும். எமது இசை மக்களுக்கு சலித்துவிடாமல் பின்னால் முன்னேறி வருபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். அவர்கள் முன் செல்ல வழி செய்ய வேண்டும்.

அந்த எண்ணம் எல்லா கலைஞர்களுக்கும் இருக்க வேண்டும். எவரேனும் நன்றாக செய்தால் அவரை முன் உதாரணமாக எடுத்துக் கொள்வேனே தவிர, அது திறம் இது திறம் என்ற கொள்கை என்னிடத்தில் இல்லை.

கே: இப்பொழுது உங்கள் பெயரில் ஓர் இசைக்குழுவை ஆரம்பித்துள்ளீர்கள். உங்களுக்குப் பின் இந்த இசைக் குழுவைக் கொண்டு செல்வது யார்?

அப்படி ஒரு நியதியை வைத்து இந்த இசைக் குழுவை நான் தொடங்கவில்லை நானிருக்கும் வரை செய்வேன். எனக்கு இந்தத் தொழிலில் 39 வருடகால அனுபவம் உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் இந்தத் தொழிலை விடலாமா என்று கூட சிந்தித்து இருக்கின்றேன். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறேன்.

“பேச்சு பல்லக்கு தம்பி கால்தடை” என்பர். அதுபோல ஊரெல்லாம் பேசுவார்கள் சாந்தன் இப்படிப் பாடுறார் அப்படிப் பாடுறார் என்று ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தேன். இருப்பினும் கலையிலுள்ள பற்றும் அன்பும் மக்கள் ஆதரவும் இதிலிருந்து ஒதுங்கிவிடாது செய்துள்ளது.

இந்நிலை எனது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது. அவர்கள் பொருளாதார ரீதியில் வளர வேண்டும். என்பதையும் என்னால் தீர்மானிக்க முடியாது அதை இறைவன் கொடுக்க வேண்டும்.

கே: தங்களது பிள்ளைகள் இத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறித்து எதை உணர்கிறீர்கள்?

நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நான் மேடையில் பாடிவிட்டு வரும் போது எனது அப்பா சந்தோஷமாக சொல்வார் “என்ர மகனை போல பாட யாருமில்லை; நல்லா பாடுறான்” அதே நிலையிலேயே இன்று நானும் இருக்கிறேன்.

கே:இப்போது தங்களது தனித்துவமான இசை முயற்சிகள் எவ்வாறுள்ளன?

இறுவட்டுகள் பலவற்றில் பாடி வருகிறேன். பல கோயில்கள் குறித்த இறுவெட்டுக்களும் வெளிவந்துள்ளன.

திருகோணமலை சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சில ஆலயங்களுக்கான பாடல்கள் இதில் அடங்குகின்றன. இது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

கே: உங்களது இசைப்பயணத்தில் நெகிழ்ச்சித்தரும் நிகழ்வாக அமைந்தது எது?

ஒரு காலத்தில் தென் இந்திய பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்தோம் எங்களுடைய இசையில் சுயமாக எனது குரலில் சொந்தப் பாடல்கள் பாடும்போது நெகிழ்திருக்கின்றேன்.

கே: விரைவில் அதாவது எதிர்வரும் 11ஆம் திகதி உங்கள் இசை நிகழ்ச்சியன்று கொழும்பில் நடைபெறுவதாக அறிகிறோம். இதுகுறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்.

ஆம். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முழுமையாக எனது இசைக்குழுவினர் இந்நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். நம்நாட்டிலுள்ள திறமைமிக்க கலைஞர்களை இம் மேடையில் நீங்கள் சந்திக்கலாம். நம்மவர்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இந்நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து மகிழலாம்.

https://youtu.be/axse91UuFnc

https://youtu.be/NNgQ2IBztmA