ஈரான் விவகாரம்: ட்ரம்ப் – மக்ரோன் அவசர கலந்துரையாடல்!

ஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும் நேற்று (வௌ்ளிக்கிழமை) தொலைபேசி மூலம் இக்கலந்துரையாடலை மேற்கொண்டதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டதென பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, விரிவான வர்த்தக செயற்பாடுகள், சர்வதேச பாதுகாப்பு காரணிகள், ஈரானின் தற்போதைய நிலைமை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான எல்லை நெருக்கடிகள் தொடர்பாக கருத்துக்களை பறிமாற்றிக் கொண்டதாக வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரான்சின் உத்தியோகபூர்வ அரச மாளிகையான எலிஸீ மாளிகை வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டு தலைவர்களும் சிரியா, ஈரான் மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன முறுகல் நிலை தொடர்பாகவே கலந்துரையாடியதாகவும், வர்த்தக செயற்பாடுகள் தொடர்பாக எந்தவிடயமும் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிரசல்ஸில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் இறுதியாக ட்ரம்பும் மக்ரோனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !