ஈரானைப் போல பாகிஸ்தானை ஏன் தண்டிக்கக் கூடாது? ராணுவ வல்லுநர்கள் கேள்வி
பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும், அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்காக சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த சாத் மொஹ்சினி (saad mohseni) என்பவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் 3500 பேர் கொல்லப்பட்டதற்கு தலிபான்களும், அவர்களின் தலைவர்களான ராவல்பிண்டியிலிருக்கும் பாகிஸ்தான் தளபதிகளும்தான் காரணம் என்றும், ஆதலால் சுலைமானியை கொல்ல கையாண்ட வழிமுறையை, பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை கொல்ல ஏன் கையாளக் கூடாது என கேள்வியெழுப்பியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ஈரான் ஆதரவு வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களால் அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதேவேளையில் பாகிஸ்தான் ஆதரிக்கும் தலிபான்கள், ஹக்கானி பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களை கொலை செய்கையில், அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தலிபான்களை தூண்டிவிட்டு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு கொல்வதாக அமெரிக்க ராணுவ கமாண்டர்களும், அந்நாட்டு மூத்த அதிகாரிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இருப்பினும், அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் அரசுகள், இந்த விவகாரத்தில் நிதியுதவியை நிறுத்துவது, ராஜீய உறவுகளை குறைப்பதை தவிர பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.