ஈபிள் கோபுரத்தினை பொதுமக்கள் நாளை பார்வையிட தடை!

பிரான்ஸில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் காரணமாக ஈபிள் கோபுரத்தினை நாளை(சனிக்கிழமை) மக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பெட்ரோல் விலை அண்மைக்காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்தும் கலவரம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பெட்ரோல் விலை உயர்வை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர்.

ஏற்கனவே சனிக்கிழமை மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.

எனவே இதற்கு மஞ்சள் சட்டை போராட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன், திட்டமிட்டபடி நாளை மஞ்சள் சட்டை போராட்டம் நடைபெறும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் 89 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தலைநகரம் பரிசில் மாத்திரம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !