இழப்பீடு கிடைக்காத வடக்கு மக்கள் மேன்முறையீடு செய்யலாம்: ஹரிசன்

இழப்பீடு கிடைக்கப்பெறாத வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்கள் மேன்முறையீடு செய்யலாம் என விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினாலும், சேனா படைப்புழுக்களினாலும் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசின் நிவாரணம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே விவசாய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், ”வடக்கில் 50 ஆயிரம் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இழப்பீட்டு தொகை வழங்கும் நடவடிக்கை வடக்கிலுள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. எவருக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மேன்முறையீடு செய்ய முடியும்.

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கொடுப்பனவு செலுத்தப்பட்டு வருகிறது. நிலக்கடலை பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது குறித்த மதிப்பீடு கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுப்போம்.

ஆனால், போலியான தேவையற்ற விதத்தில் சிலரால் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட செயலாளர்களின் மதீப்பீடுகள் முன்வைக்கப்பட்டவுடன் அனைவருக்கும் இழப்பீடு வழங்க தயார்.

இதேவேளை, படைப்புழு பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !