Main Menu

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சந்தித்த ஜேர்மனி அதிபர்!

_ ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல், இளம் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிற முன்னணி எதிர்கால ஆர்வலர்களை சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை குறிக்கோள்கள் குறித்து, பெர்லினில் நேற்று (வியாழக்கிழமை) இவர்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.

ஜேர்மனியைச் சேர்ந்த இணை பிரச்சாரகர்கள் லூயிசா நியூபவுர் மற்றும் பெல்ஜியத்தின் அனுனா டி வௌர் மற்றும் அடிலெய்ட் சார்லியர் ஆகியோருடன் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயதான கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், புதைபடிவங்களில் இருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளுக்கு தடை விதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதை வழி மொழிந்து, டைட்டானிக் கதாநாயகன் லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட ஒரு லட்சத்து 25,000பேர் கையெழுத்திட்ட மனுவை ஜேர்மனி அதிபரிடம் கையளித்தார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விதமாக நடைபெறும் ஆய்வுகள் மற்றும் எரிபொருள் எடுக்கும் பணிகளில் ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதை நிறுத்த வலியுறுத்தும்படி கிரெட்டா துன்பெர்க், கோரிக்கை வைத்தார்.

மேலும், இவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்ததாக ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

பூகோள வெப்பமயமாதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை கவனத்தில் கொள்வதற்காக 15 வயதான துன்பெர்க், சுவீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாடசாலைக்கு செல்வதை தவிரத்து போராட்டம் நடத்த தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.