இளம்பெண்கள் கொலை வழக்கில் இன்னொரு சுவிஸ் நாட்டவர் கைது!

ஸ்கேண்டினேவிய இளம்பெண்கள் இருவர் அட்லஸ் மலைப்பகுதியில் கொல்லப்பட்ட சம்பவத்தில், இரண்டாவது சுவிஸ் நாட்டவர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய – சுவிஸ் இரட்டைக் குடியுரிமை கொண்ட அந்த நபர், Témara என்னுமிடத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மொராக்கோ பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் கைது செய்யப்பட்ட நபருக்கு கொலையில் என்ன பங்கு என்பது இன்னும் தெரியவில்லை.

அவரது கைது சம்பவத்தை உறுதி செய்துள்ள சுவிஸ் ஃபெடரல் பொலிசார், அவரை விசாரிப்பதற்கு தாங்கள் இதுவரை கேட்டுக் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அந்த நபர் மொராக்கோவில்தான் வாழ்ந்து வந்துள்ளதாகவும், சமீப காலமாக அவர் சுவிட்சர்லாந்தில் வாழவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர், Marrakeshக்கு தெற்கே அமைந்துள்ள அட்லஸ் மலைப்பகுதியில் இறந்து கிடந்த டென்மார்க்கைச் சேர்ந்த மாணவியாகிய Louisa Vesterager Jespersen (24) மற்றும் நார்வேயைச் சேர்ந்த Maren Ueland (28) ஆகியோரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது நபர் ஆவார்.

இதற்குமுன் 25 வயதான சுவிஸ் – ஸ்பானிஷ் குடிமகன் ஒருவர் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

ஜெனீவாவில் வளர்ந்த அந்த நபர், தனது மூளைக்குள் இருந்து தன்னை குரல்கள் கட்டுப்படுத்தியதாகவும், ஒரு வழியாக மத நம்பிக்கை தன்னை மீட்டதாகவும் தெரிவித்திருந்ததாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் சுவிட்சர்லாந்தில் குற்றவியல் பின்னணி கொண்டவராக இருந்தபோதும், கொலையில் நேரடியாக பங்கேற்றதாக சந்தேகிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் குறித்தும், புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் அவர் கற்றுக் கொடுத்திருக்கலாம் என மொராக்கோவின் விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அவர் கொலையாளிகளுக்கு அசாதாரண துப்பாக்கிச் சுடும் முறைகளை கற்றுக் கொடுத்திருக்கலாம் என மொராக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !