இலஞ்சம் கோரிய அமைச்சர்களின் செயலாளர்கள் கைது

உத்தர பிரதேசத்தில் மூன்று அமைச்சர்களின் செயலாளர்கள், இலஞ்சம் கோரிய காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அவர்களை கைது செய்துள்ளது.

இக்காணொளியை உத்தர பிரதேசத்திலுள்ள தனியார் செய்தி நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில் சுரங்கத்துறை அமைச்சர் அர்ச்சனா பாண்டே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மற்றும் கல்வியமைச்சர் சந்தீப் சிங் ஆகியோரின் செயலாளர்கள் இலஞ்சம் கேட்கும் காட்சிகள் காணப்படுகின்றன.

மேலும் ராஜ்பரின் செயலாளர் ஓம் பிரகாஷ் காஷ்யப், பணி இடமாற்றத்துக்கு 40 இலட்சம் இந்திய ரூபாய் கோரும் காட்சிகளும் அதேபோன்று ஏனைய இரு  செயலாளர்களும் சுரங்க துறை மற்றும் புத்தகங்கள் தொடர்புடைய சட்டவிரோத ஒப்பந்தங்களுக்கு பேரம் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் அறிந்த முதலமைச்சர் ஆதித்யநாத், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு  உத்தரவிட்டதாகவும் மூன்று செயலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஊழல் மற்றும் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில், மூன்று செயலாளர்களையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !