இலங்கை பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் – அமெரிக்கா

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.

இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது.

உங்களுடைய (சிறிசேனா) சமீபத்திய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், உங்கள் நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகளை தடம் புரளச்செய்யும் வகையிலும் அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரக் குழு, இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !