இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன் படி களமிங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அஞ்சலோ மெத்தியூஸ் 83 ஓட்டங்களையும், நிரேஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் டிம் சவுத்தீ 6 விக்கெட்டுகளையும், நெய்ல் வாக்னர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, டொம் லதமின் இரட்டை சதத்தின் துணையுடன் 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக டொம் லதம் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

296 ஓட்டங்கள் பின்னிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, போட்டியின் இறுதிநாளான இன்று, 3 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக் குறுக்கிட்டது.

இதனால் போட்டியை மேற்கொண்டு நடத்த முடியாமல் போனதால், போட்டி சமநிலை பெறுவதாக போட்டி நடுவர் அறிவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ் சார்பில், இலங்கை அணி சார்பில், அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இவ் இருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்த ஓட்ட எண்ணிக்கையே இப்போட்டியை சமநிலைப்படுத்துவதற்கு பெரும் துணையாக இருந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி சார்பில், ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட டொம் லதம் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !