இலங்கை குண்டுவெடிப்பு- சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது!
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லியில் இலங்கை வாலிபர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு.
இலங்கையில் கடந்த மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியானார்கள்.
இதனை தொடர்ந்து அந்த நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.
அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார்.
இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது.
இது தொடர்பாக நேற்று இரவு சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர்.
இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர்.
நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது.
இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை.
இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.
இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.