இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய மந்திரி சுஷ்மா தெரிவித்தார்.
இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.
இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இத்தகவலை இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்திருப்பதாக சுஷ்மா டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற ஹெல்ப்லைன் எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.