இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்

இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை ஒரு போதும் முடிவுக்கு வராதென்றும், அதற்கு தீர்வுகாண இறைவனால் மட்டுமே முடியும் என்றும், இலங்கையின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திருவண்ணாமலையில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு சென்று ஆலய தரிசனம் செய்தார். அப்போது, சாய்பாபா படத்துடன் கூடிய 100 தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் அமைச்சரை சந்தித்த இந்திய ஊடகவியலாளர்கள், இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில்  வினவியபோது அமைச்சர் மேற்படி கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று தமிழகத்தை சென்றடைந்த அமைச்சரை சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்த போதும் இதே கேள்வியை கேட்டிருந்தனர்.

இதன் போது கூறிய அமைச்சர், இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் எனக் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் வடக்கு-கிழக்கில் ராணுவத்தின் வசமுள்ள காணிகள் பெரும்பாலும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் உத்தரவிற்கு அமைய ஏனைய காணிகளும் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !