இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மார்கிராம் 21 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 61 பந்தில் 65 ரன்களும், டு பிளிசிஸ் 69 பந்தில் 88 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.
வான் டெர் டஸ்சன் 40 ரன்களும், டுமினி 22 ரன்களும், பெலுக்வாயோ 25 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 26 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து ஆடுகளங்களில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியும் எங்களால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க இயலும் என்பதை நிரூபித்துள்ளது.
இதனையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டகாரர் குசல் பெரேரா 0 என்ற முறையிலும் அடுத்து வந்த திருமன்னே 10 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 37 ரன்களிலும் வெளியேறினார்கள். இந்நிலையில் குனரத்தினேவுடன் மேத்யுஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இலங்கை அணி 170 ரன்கள் எடுத்திருந்த போது குனரத்தினே அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரரகள் வந்த வேகத்தில் திரும்பினர். மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனஜெய டி செல்வா 5, ஜீவன் மெண்டிஸ் 18, ஸ்ரீவர்த்தனா 5, வண்டார்சே 3, லக்மல் 1, என வெளியேற பேரேரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அண்ட்லி 4 விக்கெட்டுகளை அள்ளினார். லுங்கி 2 விக்கெட்டும் ரபாடா, தாஹிர், டவினி, டுமினி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.