‘இலங்கையில் 50 பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்’ – ஞானசார தேரர்
இலங்கையிலுள்ள 50 பௌத்த விகாரைகளின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமையன்று சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதவான் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், அவரை மீண்டும் விளக்கமறியலுக்கு அழைத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த தருணத்தில், ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பான தகவல்கள் தன்வசம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், சிறைச்சாலைக்கு வருகைத் தரும் பட்சத்தில், அவற்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதேவேளை, அம்பாறை – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பொன்றின்போது, பல வெள்ளை நிற பெண்கள் அணியும் ஆடைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.
பெரும்பாலும் பௌத்த மதத்தை பின்பற்றும் பெண்கள், பௌத்த விகாரைக்கு அணியும் ஆடைகளையே பாதுகாப்பு பிரிவினர் குறித்த பகுதியிலிருந்து கைப்பற்றியிருந்தனர்.
இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் பகுதியில், பௌத்த பெண்கள் அணியும் ஆடைகள் எவ்வாறு, எதற்கான கொண்டு வரப்பட்டன என்ற கேள்வி பாதுகாப்பு பிரிவுக்கு எழும்பியது.
இதற்கமைய நடத்தப்பட்ட விசாரணைகளி;ன் ஊடாக, பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த பின்னணியிலேயே இலங்கையிலுள்ள 50 பௌத்த விகாரைகளின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான திட்டங்கள் காணப்படுகின்றமையினால், பௌத்தர்களின் புனித தினமான வெசாக் பூரணை மற்றும் பொசன் பூரணை தின நிகழ்வுகளை ரத்து செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, இலங்கையிலுள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.