இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்! ஐநா சபை தலையிட வேண்டும்-திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக வெளியிடட கருத்து.
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிர்ச்சியளிக்கிறது. நீண்டகால யுத்தத்திற்குப் பிறகு சற்றே
அமைதி திரும்பிக் கொண்டிருந்த அந்த நாட்டில் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதை உணர்த்துகிறது.
சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் பின்னால் பேரினவாத சக்திகள் இருக்கக்கூடும் என்ற ஐயம் எழுகிறது. இவ்வளவு பெரிய தாக்குதலைக் கண்டறிந்து தடுக்கும் வல்லமை கொண்டதாக இலங்கை அரசு இல்லாத நிலையில் அங்கே அமைதியை நிலைநாட்ட ஐநா சபை தலையிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இன்று காலை கொழுப்பு, மட்டக்களப்பு, நீர்க்கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் தேவாலயங்களுக்குச் சென்ற அப்பாவி கிறித்தவ மக்களும்; கொழும்பு நகரில் இருக்கும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர் உள்பட பல பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்புப் போர் முடிவுக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இலங்கையிலுள்ள பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்கும் தீவிரவாதிகளே இந்த தாக்குதல்களில் பின்னால் இருந்தனர் என்பதை செய்திகள் புலப்படுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் சர்வதேச அரங்கில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும்.
இலங்கையில் அமைதி திரும்பி விடக்கூடாது என்று எண்ணுகிற சக்திகள் தான் இதைச் செய்திருக்க வேண்டும் குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்துத் தோற்றுப் போனவர்கள் மீண்டும் பயங்கரவாதத்தின் துணை கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறது.
சிறுபான்மை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதலை உருவாக்குவதற்கு பேரினவாதிகள் முற்படலாம் அதற்கு இன சிறுபான்மையினரான தமிழர்களும், மதச் சிறுபான்மையினர்களும் பலியாகிவிடக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் எந்தவித யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் இடமளிக்காமல் அமைதியை நிலைநாட்டிட எல்லோரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
ஐநா மனித உரிமை கவுன்சில் மூலமாக கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கும் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. இந்நிலையில் பயங்கரவாதத்தின் துணைகொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற பேரினவாத சக்திகள் முனைந்துள்ளன, இதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கக் கூடாது .
உடனடியாக இலங்கை பிரச்சனையில் ஐநா சபை தலையிட்டு அங்கு உள்ள மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.