இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் ஒமிக்ரோன் தொற்றாளர்
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அறிவித்தது.
இதனையடுத்து, பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.
கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து இலங்கை உட்பட பல நாடுகள் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடைகளை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.