இலங்கையின் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள்!
ஈழத்தமிழரைக்
கொன்றால் என்ன
இந்தியா நமது தேசம்தான்!!
இலங்கைக்குத் துணையாய்
நின்றால் என்ன
இந்தியா நமது தேசம்தான்!!
“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்”!
பாரதி சொன்னதை
மறக்காதே – என்ன
பாதகம் செய்தாலும்
வெறுக்காதே!
இராசபக் சேவுக்கு
இரத்தினக் கம்பளம்
விரித்தால் என்ன விரிக்கட்டும்! – தமிழ்
இனத்தைக் கொன்று
குவித்ததை நினைத்து
சிரித்தால் என்ன சிரிக்கட்டும்!
இலங்கையைக் காக்க
ஐ.நா. சபையில்
துடித்தால் என்ன துடிக்கட்டும்! – இன்னும்
எஞ்சிய பேர்களை
முழுதுமாய்க் கொன்று
முடித்தால் என்ன முடிக்கட்டும்!
பாரத நாடு பழம்பெரும் நாடு!
நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்
ஜெனீவா நகரில்
தமிழர்கள் பேரணி
நடத்தினால் என்ன நடத்தட்டும்! – இந்த
ஜெகம்முழு துக்கும்
உண்மை தனைவெளிப்
படுத்தினால் என்ன படுத்தட்டும்!
பலப்பல நாடுகள்
நமக்கா தரவு
கொடுத்தால் என்ன கொடுக்கட்டும்! – இந்த
பாரததேசம்
திட்டமிட் டே நமைக்
கெடுத்தால் என்ன கெடுக்கட்டும்!
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்!
குற்ற வாளியே
நீதி விசாரணை
செய்தால் என்ன செய்யட்டும்! – படு
கொலைசெய்ய மீண்டும்
குண்டு மாரிதான்
பெய்தால் என்ன பெய்யட்டும்!
அன்றுபோல் மீண்டும்
இந்தியா தமிழரைக்
கொன்றால் என்ன கொல்லட்டும்! – அட
அதுதான் அரச
தருமம் என்று
சொன்னால் என்ன சொல்லட்டும்!
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்
இந்தியா போர்வையில் வாழும் தமிழ்நாட்டு இந்தியனே
நாளை உமக்கும் எங்கள் நிலையே!
-புலவர் புலமை பித்தன்