இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயமொன்று இடம்பெறுவதாகவும் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் இடம்பெறும் என இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் தன்னிடம் கூறியதாக இரா.சம்பந்தன் இதன்போது தெரிவித்திருக்கிறார்.
எனினும் இந்த விஜயங்களுக்கான திகதிகள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இரா. சம்பந்தன் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும் இதன்போது வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இரா.சம்பந்தன் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.