இலங்கைக்கு எதிரான 30/1 தீர்மானம் செல்லுபடியற்றது: கம்மன்பில

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ள நிலையில் அப்பிரேரணை செல்லுபடியற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் புதிதாக சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது அசாதாரணமானது.

அவ்வாறாயின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இன்றேல் இரு தரப்பிற்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

இதனையே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடைப்பிடித்தது. ஆனால் பயங்கரவாதிகளை விடுவித்து இராணுவத்தை தண்டிப்பதே தற்போதைய அரசாங்கம் கொள்கையாகக் காணப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அரசியல் ரீதியில் பக்கசார்பாக செயற்படுவதா தெரிவித்து, 30/1 தீர்மானத்தை கொண்டுவந்த அமெரிக்கா கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியது.

எமக்கெதிராக பிரேரணை முன்வைத்த அமெரிக்காவே இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைக்கும் பட்சத்தில், அதனையே நாமும் சுட்டிக்காட்டி அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை செல்லுபடியற்ற எனத் தெரிவிக்க எமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

எனவே, இத்தீர்மானத்தை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கை இத்தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதனாலேயே சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியது. அவ்வாறாயினும் இத்தீர்மானத்திலிருந்தும், இணை அனுசரணையிலிருந்தும் விலகிக் கொள்வதே ஒரே வழி” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !