இறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கபுரம் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே விசனத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் வாழும் மாணிக்கபுரம் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பாறையிலிருந்து பெருமளவான வாகனத்தில் வந்தவர்கள் புத்தபிக்குகளுடன் இணைந்து இம்மலையில் புத்தர் சிலையை வைத்தனர்.

இதற்கு, மாணிக்கபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தமக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலை வைக்க அதிகாரம் உள்ளதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எல்லைக் கிராமங்களை ஆக்கிரமிக்கும்நோக்கில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு, பின்னர் அவ்விடம் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாகத் தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதையும் மக்கள் தெரிவித்தபோதும், இதுவரைக்கும் எவரும் வந்து பார்க்கவுமில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ira2


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !