இராணுவ பல்கலைக்கழக மாணவர்களிடம் ஜேர்மனிய அதிகாரிகள் விசாரணை!

தீவிரவலதுசாரி குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மியூனிக்கில் அமைந்துள்ள இராணுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களிடம் ஜேர்மனிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத அமைப்புக்கள் ஜேர்மனியில் தங்கியுள்ளன என்ற கவலைகளுக்கு மத்தியில் இத்தகைய விசாரணைகள் ஜேர்மனியில் இடம்பெறுவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.

மேற்படி ஊடக தகவல்களின் பிரகாரம், தீவிரவலதுசாரி குழுக்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலும், புகலிடக் கோரிக்கையாளர் என்று பொய்யான தகவல்களை வழங்கியதாகவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரி ஒருவருக்கும் குறித்த மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தே விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரி, இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது குற்றம்சாட்டக்கூடியவாறான தாக்குதலை அவர் திட்டமிட்டாரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த மாதங்களில் அகதிகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடுகளை ஜேர்மனி கண்டிருக்கின்றது. ஜேர்மனிக்குள் அகதிகள் நுழைவதற்கு தீவிர வலதுசாரிக் குழுக்கள் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !