இராணுவ ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன: விந்தன்
வடக்கு, கிழக்கில் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் வைக்கும் நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கில் இல்லாத இராணுவம் வடக்கு வீதிகள் முழுக்க குவிக்கப்பட்டுள்ளது. இது இராணுவ ஆட்சியையே எடுத்துக் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரட்ணம் விந்தன் தெரிவித்தார்.
சமகால நிலைவரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி முன்னைய மஹிந்த ராஜபக்்ஷவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளர், இராணுவத்தில் லெப்டினன்ட் கேணல் பதவியிலிருந்தவர். அவர் இன்று ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அவர் ஜனாதிபதியாக வந்த உடனேயே இராணுவத்திற்கு பாதுகாப்பு சம்பந்தமான சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கின்றார்.
இராணுவம் இப்போது வீதியெங்கும் இறங்கியுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாதுகாப்பு அதிகாரங்கள் இராணு வத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தேவையான அளவிற்கு பொலிஸ் நிலையங்கள் உள்ளன. சிவில் சம்பந்தமான ஏனைய நடவடிக்கைகளையும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் இங்கு வடக்கு, கிழக்கில் இராணு வம் வீதிகளில் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த நடைமுறை யுத்த காலத்தில் தான் இருந்தது. ஆனால் தென்னிலங்கையில் பார்த்தால் இராணுவத்தினரை எங்கும் காணமுடியாதுள்ளது. இது ஒரு இனத்தை அடக்குவதற்கு இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியை கையகப்படுத்தி விகாரைகளை அமைக்கின்றது. இராணுவம் என்ன செய்ய வேண்டும்? ஒட்டுமொத்த மதங்களுக்கும் இனங்களுக்கும் தான் பாதுகாப்பே தவிர என்ன நடக்கிறது? கத்தோலிக்க ஆலயம் கட்டுவதில்லை, கோவில் கட்டுவதில்லை, மசூதிகள் கட்டுவதில்லை, தையிட்டியில் விகாரை எதற்கு? மதத்தின் பெயரால், இனத்தின் பேரால் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எங்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்த அரசாங்கம்.
அது மட்டுமல்ல நீராவியடிப்பிள்ளை யார் ஆலயத்தில் புத்தர் சிலையை வைக்கின் றார்கள். இது மட்டுமன்றி கொழும்புத்துறை யில் 300 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்கள். புங்குடுதீவில் வல்லன் பகுதியில் 10 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதிலிருந்து பார்க்கும்போது இராணுவம் வடக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். இது தொடர்பான அரச அதிகாரிகள் அல்லது நில அளவையாளர்களாக இருக்கலாம். அல்லது பிரதேச செயலாளராக இருக்கலாம். அப்பாவிப் பொதுமக்களின் காணிகளையும் சொந்த நாட்டிலே அகதிகளாக வாழும் மக்களையும் குடியேற்றம் நடைபெறாது இருக்கும் பிரதேசத்தினையும் தோட்டக் காணிகளையும் கருத்திற்கொண்டு இராணுவம் காணிகளை ஆக்கிரமித்து தோட்டம் செய்வது, விகாரை அமைப்பது தொடர்பான செயல்களுக்கு உடந்தையாக இருக்காமல் அடக்குமுறையான செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதில் சம்பந்தப் பட்ட சகல அதிகாரிகளும் திணைக்களங் களும் ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என்றும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில் இதற்கான போராட்டங்கள் எதிர் காலத்தில் தீவிரமடையும் என்றார்.