இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது: ஜப்பான் குழந்தை சங்கம்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, முகக்கவசம் அணிவதை ஒவ்வொரு நாடுகளும் கட்டாயப்படுத்தி வருகின்ற நிலையில், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது என ஜப்பான் குழந்தை சங்கம் எச்சரித்துள்ளது.
ஏனெனில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது சுவாசத்தை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் குழந்தை சங்கம் தனது உத்தியோகபூர்வ இணையதள பக்கத்தில், ‘முகக்கவசங்கள் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன. இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது.
முகக்கவசங்கள் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகளிடையே மிகக் குறைவான கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுகளே உள்ளதாகவும், பெரும்பாலான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிலோ அல்லது பகல்நேர பராமரிப்பு வசதிகளிலோ வைரஸ் தொற்று பரவல்கள் எதுவும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பகிரவும்...