இரண்டு முக்கிய அகதி முகாம்களை மூடுவதாக அறிவித்தது அவுஸ்ரேலியா!

இரண்டு அதிமுக்கிய உயர்பாதுகாப்பு கொண்ட அகதி முகாம்களை மூடவுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக அவுஸ்ரேலியாவிற்கு வருகை தரும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மெல்பேர்னின் Maribyrnong குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இறுதி அகதி வெளியேறுவதையடுத்து குறித்த முகாம் இந்த வாரம் மூடப்படவுள்ளது.

அத்துடன், சிட்னி விலவூட் தடுப்பு முகாமின் பகுதியாகவுள்ள Blaxland centre அங்குள்ள சிறு எண்ணிக்கையிலான அகதிகள் ஏனைய முகாம்களுக்கு மாற்றப்படுவதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அவுஸ்ரேலியாவிற்கு படகுகள் மூலம் அதிகளவான அகதிகள் வருகை தந்தமையினைத் தொடர்ந்து அப்போதைய லேபர் அரசாங்கம் 17 புதிய முகாம்களை திறந்திருந்தது.

லேபர் ஆட்சியில் மொத்தம் 26 அகதி முகாம்கள் இயங்கிவந்தன. எனினும், லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், படிப்படியாக கட்டுபடுத்தப்பட்ட அகதிகளின் வருகைக்கு சமாந்தரமாக அகதி முகாம்களும் மூடப்பட்டன.

இந்தநிலையில் தற்போது அவுஸ்ரேலியாவில் எட்டு அகதி முகாம்கள் மாத்திரமே சுமார் 1250 அகதிகளுடன் இயங்கிவருகின்றன. அத்துடன், அவுஸ்ரேலியாவிற்கு வெளியே நவுறு – மனுஸ் தீவுகளில் சுமார் ஆயிரம் அகதிகள் உள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு வந்தவர்கள், அகதிகளாக சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் தவறான நடத்தைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டு மீண்டும் தடுப்புக்கு கொண்டுவரப்பட்டவர்கள், விஸா கால எல்லை முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தவர்கள், தாங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்பதற்கான காரணத்தை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்காக வழக்குகள் மற்றும் மேன்முறையீடுகள் தாக்கல் செய்துள்ளவர்கள் என பலதரப்பட்டவர்கள் அவுஸ்ரேலிய அகதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !