இரண்டு மாதங்களில் பாடசாலைகளை திறக்கவுள்ளதாக தகவல்!
பாடசாலைகளை இன்னும் இரண்டு மாதங்களில் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மீள் அறிவித்தல் வரை பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை செயலாளர் அங்கிதா கர்வால் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ருவிட்டர் மூலமாக இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பது சம்பந்தமாக என்ன செய்யலாம் என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பல்வேறு வேண்டுகோள்கள் எங்களுக்கு வந்துள்ளன.
அதன் அடிப்படையில் பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல வரும் கல்வி ஆண்டில் பாடசாலையின் நேரத்தையும் குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுசம்பந்தமாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்கள் துறைக்கு தெரிவிக்கலாம். இதன்மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறும்போது பாடசாலைகளை அடுத்த 2 மாதத்தில் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.