இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளின் விபரம் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது நியூசிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.

தற்போது இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தாக ஒரேயொரு ரி-20 போட்டி மட்டும் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் முடிவடைந்தவுடன் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அவுஸ்ரேலியா செல்லவுள்ளது.

இதற்கிடையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக இலங்கை அணி விபரத்தை பார்க்கலாம்,

இலங்கை அணியை பொறுத்தவரை, நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு உள்ளாகியிருந்த சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்தியூஸ், இன்னமும் காயம் குணமடையாத நிலையில் அணியிலிருந்து விலகியுள்ளார்.

அத்தோடு நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்க தவறியிருந்த தனுஷ்க குணத்திலக்கவும் அணியில் இணைக்கப்படவில்லை.

மேலும், இலங்கை டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக இடம்பெறாமல் இருந்த குசல் ஜனித் பெரேராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றும் விளையாடாமல் இருந்த, துடுப்பாட்ட வீரர்களான சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமன்ன ஆகிய வீரர்கள் அணியில் தொடர்ந்தும் நீடித்துள்ளனர்.

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணியில், திமுத் கருணாரத்ன லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, தனன்ஞய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்தபடியாக நாம் அவுஸ்ரேலியா அணியின் விபரத்தை பார்க்கலாம்,

அவுஸ்ரேலியா அணியை பொறுத்தவரை, 20 வயதான துடுப்பாட்ட வீரர் வில் பக்கோவ்ஸ்கி, இந்த தொடரின் ஊடாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெறுகிறார்.

விக்டோரியா அணிக்காக விளையாடும் அவர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மேலும், துடுப்பாட்ட வீரர்களான ஜோ பார்ன்ஸ் மற்றும் மெட் ரென்ஷெவ் ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய ஷோன் மார்ஷ், ஆரோன் பின்ஞ், மிட்செல் மார்ஷ் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப்  ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய மார்னஸ் லேபுஷ்சாக்னே  மற்றும் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர்.

டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்ரேலியா அணியில், ஜோஸ் ஹசில்வுட், ஜோ பார்ன்ஸ், பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஹரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லேபுஷ்சாக்னே, நாதன் லியோன், வில் பக்கோவ்ஸ்கி, மெட் ரென்ஷெவ், மிட்செல் ஸ்டாக், பீட்டர் சிடில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 24 ஆம் திகதி, பிரிஸ்பேன் நகரில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, கன்பெர்ரா நகரில் பெப்ரவரி 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !