இரண்டாம் உலகப்போர் அன்று வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு நாளை செயலிழக்க வைக்க திட்டம்!

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர் அன்று வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு ஒன்றை நிபுணர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயலிழக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு காரணமான ஜேர்மனிக்கு எதிராக பிரித்தானியா போரிட்டது.

அப்போது, ஜேர்மனியில் உள்ள Frankfurt நகர் மீது ராட்சத வெடிகுண்டு ஒன்றை பிரித்தானியா விமானத்திலிருந்து வீசியது.

ஆனால், இந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் நகரின் மையத்தில் மண்ணில் புதைந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நகரின் மையத்தில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் புணரமைப்பு பணி நடந்தபோது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஜேர்மன் வரலாற்றில் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதில் இது மிகப்பெரிய வெடிகுண்டு ஆகும்.

இந்த வெடிகுண்டை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நிபுணர்கள் செயலிழக்க உள்ளனர்.

1.8 டன் எடையுள்ள இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும்போது விளைவுகள் மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வெடிகுண்டு உள்ள இடத்திற்கு சுமார் 600 மீற்றர் தொலைவில் ஜேர்மனியின் மத்திய வங்கியான Bundesbank அமைந்துள்ளது.

இந்த வங்கியில் 70 பில்லியன் யூரோ மதிப்புள்ள 1,710 டன் தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த இடத்திற்கு அருகில் காவல் துறையின் தலைமை அலுவலகமும் அமைந்துள்ளது.

வெடிகுண்டு செயலிழக்க வைக்க திட்டமிட்டுள்ளதால் அப்பகுதியை சுற்றியுள்ள 60,000 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.

இப்பகுதிக்கு போக்குவரத்து ஒரு நாள் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுக் குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், வெடிகுண்டை செயலிழக்க வைக்க அதிநவீன திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகளில் இது மிகப்பெரியது என்பதால் ஜேர்மன் வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !