இயேசுவின் திருப்பாடுகளின் புனித வெள்ளி இன்று

உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசுவின் திருப்பாடுகளை நினைவு கூருகின்றனர். பரிசுத்த வாரத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்கள் நேற்றைய தினம் பெரியவியாழனன்று இயேசு கிறிஸ்து தம் பாடுகளை நினைவு படுத்துவதையும், தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுவதையும், அத்தோடு திருப்பலியை அறிமுகப்படுத்தி திவ்விய நற்கருணையின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதையும் தியானித்தனர். இயேசு தாம் பாடுபடப் போவதையும், சிலுவையில் அறையுண்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலையும் அறிந்திருந்தார். தம் சீடர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தியும் இருந்தார்.

பரிசுத்த வாரத்தில் புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி, உயிர்த்த ஞாயிறு என்பன மிக முக்கிய நாட்களாகும். புனித வியாழன் இராப்போசனத்துடன் ஆரம்பமாகி உயிர்ப்பு ஞாயிறன்று இந்த முப்பெரும் நாட்கள் நிறைவு பெறுகின்றன. நாற்பது நாட்கள் இயேசு நாதரின் திருப்பாடுகளைத் தியானிக்கும் காலமானது ‘பாஸ்கா’ என அழைக்கப்படுகின்றது.

பாஸ்கா என்பதன் பொருள் துன்புறுகின்ற என்ற சொல்லை ஒத்ததாகும்.பழைய ஏற்பாட்டில் “எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன். அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும் அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்” (விடுதலைப்பயணம் 3 7-8) என்ற இறைதந்தையின் வார்த்தைகளுக்கேற்ப இஸ்ராயேல் மக்களை பாரவோன் பிடியினின்றும் அடிமைத்தனத்தினின்றும் ஆண்டவராகிய கடவுள் விடுவித்தார்.

புனித வியாழனன்று தாம் பாடுபடுவதற்கு முன்தினம் இரவு சீடர்களுக்கு இயேசு தம் மரணத்தை அருள் அடையாளமாக அறியப்படுத்தி அதனூடாகவே நற்கருணையை ஏற்படுத்தினார். அன்றைய தினம் இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களைக் கழுவுவதானது அவரது சீடத்துவ அன்பைக் குறிக்கின்றது.

நான்காம் நூற்றாண்டில் பாதங்கழுவுதல் சடங்கானது திருமுழுக்கோடு தொடர்புபட்டிருந்தது. அதனை அடுத்து ஏழாம் நூற்றாண்டு முதல் புனித வியாழன் சடங்குகள் அனைத்து ஆலயங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு அப்பழக்கம் இன்றும் தொடர்கிறது.

யூத மரபுப்படி அடிமை தன் வீட்டு எஜமானனின் கால்களைக் கழுவுதல் வழக்கம். அதனையே வித்தியாசமான அணுகுமுறையை இயேசு கையாளுகின்றார். அவர் தம் சீடர்களின் கால்களைக் கழுவுவது மட்டுமன்றி சீடர்களையும் அவ்வாறு செய்யுமாறு பணிக்கின்றார். மறுநாள் பெரியவெள்ளியன்று இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை நாம் அனுஷ்டிக்கின்றோம். இயேசு மரித்த இத்தினம் ஒரு தியாகத்தின் நாள் மட்டுமன்றி மாவீரரொருவர் மரித்த நாளுமாகும்.

இயேசு தம் உயிரை நம் பாவங்களுக்காக முற்றுமுழுதாக தந்தையிடம் ஒப்படைத்த நாள். பழைய ஏற்பாட்டில் மோயீசன் பாம்பினால் கடிபட்டவர்கள் குணமடைய வெண்கல பாம்பொன்றை பாலைவனத்தில் உயர்த்தி வைத்தது போல இறைமகன் இயேசு நாம் பாவத்தின் பிடியிலிருந்து விடுபட சிலுவையில் தன்னைத் தானே ஒப்புக்கொடுத்த நாள்.

இயேசு ஒரு குறிப்பிட்ட இனம், மதம், நாடு அல்லது சமூகத்திற்காக மரிக்கவில்லை. மாறாக அவர் உலக மக்கள் அனைவருக்காகவும் மரித்தார். இதன் மூலம் அவர் உலக இரட்சகராக திகழ்கிறார்.

புனித வெள்ளியை அனுஷ்டிக்கும் கிறிஸ்தவர்கள் உலகில் பல்வேறு வழிகளிலும் துன்புறும் மக்களுக்காக செபிப்பது நலம். இயேசுவின் சிலுவையில் இம்மக்களின் பாவங்கள் அறையப்பட்டு மூன்றாம் நாள் அவரது உயிர்ப்போடு அவர்களும் புது மனிதர்களாக உயிர்த்தெழட்டும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !