இம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு
ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.
டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.