“இன விரிசல் ஏற்படும் விதமாக அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்க்க வேண்டும்”
இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவம் வகையில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பள்ளிவாசல்களில் இருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பாக பதில் கூற வேண்டிய அமைச்சர்கள் பொறுப்பற்ற விதமாக கருத்துரைக்ககூடாது.
தேசிய பாதுகாப்பு கருதி பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் சோதனை நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளையும் அரசியல்வாதிகள் ஏற்படுத்த முடியாது. ஆகவே மேல் மாகாண ஆளுநரின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டும். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இதுவரையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக செயற்படுவது அவசியம்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நிச்சயம் வெற்றிப் பெறும். தெரிவு குழு அமைத்து உண்மைகளை மறைக்க முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் முறையாக செயற்படுத்தாவிடின் நாட்டு மக்கள் வாக்குரிமையின் ஊடாக தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.