இன்று விநாயகர் சதுர்த்தி
அதற்கு விநாயகர், ‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது.
விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்துள்ளது என்று கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபராயுகத்தில் பரராசமுனிவர் – வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் – பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளது. யுகங்களை கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.
விநாயகருக்கு யானைத் தலை அமைந்ததால் வருத்தம் கொண்ட அம்பாளை, சிவன் சமாதானம் செய்தார். ‘இந்த உருவிலேயே அவன் உலகப்புகழ் பெறுவான். மக்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகனை வழிபட்ட பின்னரே தொடங்குவர். காரிய தடை ஏற்படும் போதும், அதனை விலக்குமாறு அவனையே வேண்டுவர்’ என்றார்.
இன்றும் சிவனுக்கும் பார்வதிக்கும், அவர்களது இன்னொரு மகனான முருகனுக்கும் ஊர்கள் தோறும் ஆலயங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விநாயகருக்கு ஊர்கள் தோறும் ஆலயம் உள்ளது. அது கற்றளியாகவோ, கூரை கொட்டகையாகவோ இருக்கலாம். ஏன் சில ஊர்களில் மரத்தடியிலும் கூட இடம்பிடித்திருப்பார். இதற்கு காரணம் சிவனின் அருளாசியும் அதனடிப்படையில் மக்கள் விநாயகர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புமே ஆகும். மேலும் இதை விநாயகரின் தனிச்சிறப்பாகவும் கூறலாம்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை கடைப்பிடிப்போர், முதலில் கட்டுவது விநாயகர் கோவில்களை தாம். ஊர்கள் தோறும் சிறிய ஆலயங்களில் தனித்து இருக்கும் விநாயகர், பெரிய ஆலயங்களில் தனி சன்னிதானத்தில் இடம் பிடித்திருப்பார். விநாயகரின் தோற்றம் ஒரு அபூர்வ வடிவமாகும். அவரது முகம் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் தோற்றத்தையும், திருவடிகள் ஞானத்தையும், பெருவயிறு எல்லாப்பொருளும் தன்னகத்தே அடக்கம் என்பதையும், கரங்கள் ஐந்தொழிலையும், கொம்புகள் அறிவிற்கு முன்னுரிமை தருவதையும், தாழ்செவிகள் கேட்பனவற்றை எல்லாம் உள் செலுத்தாதே.. சரியானதை மட்டும் தேர்வுசெய் என்பதையும் உணர்த்துகின்றன. மொத்தத்தில் தனக்கு தானே தலைவனாய் தன்னிகரின்றி விளங்குபவர், விநாயகப் பெருமான்.
விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் மிக உகந்த நாளாகும். அன்றைய தினம் தான் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம். மஞ்சள், மண், பசுஞ்சாணம், மாவு, வெல்லம் ஆகியவற்றில் பிள்ளையார் பிடித்து ஆவாஹானம் செய்து வழிபடப்படுகின்றது. விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது, சிதறு தேங்காய் உடைப்பது, அருகம்புல் சாத்துவது போன்ற வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
விரதம் இருப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராடி, களி மண் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை செய்து வைத்து அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அப்போது விநாயகர் கவசம் மற்றும் விநாயகரைப் பற்றிய துதிப் பாடல்களை பாடி வழிபட வேண்டும். மறுநாள் காலை விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, பழ வகைகளை நிவேதனமாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.
அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.