இன்று திருநங்கையர் தினம்: ஷி இஸ் மை பிரதர் (SHE is my Brother) – சிறப்பு சிறுகதை

திருநங்கையர்களை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதம் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஆம் நாள் திருநங்கையர் தினம் ஆக கடைப்பிடிக்கப்படும் என கருணாநிதி உத்தரவிட்டார்.
இந்தியாவிலே முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் அவர்களுக்கு என தனித் தினம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திருநங்கை சமூகத்தாருக்கு மாலை மலர் டாட்.கம் இன்று தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
திருநங்கை எனப்படுவோர் ஆண் உறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும் என்பதால் இந்த பின்னணியின் தழுவலில் உருவான ஒரு சிறுகதையை இங்கே பிரசுரிப்பதில் பேருவகை கொள்கிறோம்.
’கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா..,’ வாசலில் காலிங்பெல் சப்தத்துடன் ஹவுஸ் ஓனர் வீட்டு நாயான ஜாக்கியின் அதிகார உறுமலும் அலமேலுவின் காதில் கலவையாக ஒலித்தது. அடுக்களையில் இருந்து முந்தானையில் முன்கையை துடைத்தபடி ஹாலுக்கு வந்து கதவைத் திறந்தவள், தங்கை மகன் பாலாஜியைப் பார்த்ததும் வாய்நிறைய புன்னகையால் வரவேற்றாள்.
’வா, பாலு. அஞ்சு கிலோமீட்டர் தூரத்துலே இருக்குற உனக்கு பெரியம்மாவை வாரமொருமுறைக்கூட வந்து பாக்க முடியறதில்லே.., முன்னேயெல்லாம் ராகவன் இருக்கும்போது அப்பப்ப இங்க வந்து கிடப்பே.., அவன் போனப்புறம் பெரியம்மான்னு ஒருத்தி உயிரோட இருக்கறதே உனக்கு மறந்துப்போயிடுத்து.., அப்படித்தானே?
ஏக்கமாக தனது விழியை ஸ்கேன் செய்யும் அலமேலுமுவின் பார்வையை நேர்மையாக எதிர்கொள்ள சற்று கூச்சமாகவே இருந்தது பாலாஜிக்கு. அவன் என்ன செய்வான்? ஷிப்ட்டை மாற்றி,மாற்றிப்போட்டு ஆபீசில் அவனை வறுத்தெடுப்பதை சொன்னால் பெரியம்மா ஏற்றுக்கொள்ளவாப் போகிறாள்?
அன்றாடம், கே.கே. நகரில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து மாம்பலம் ரெயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து செங்கல்பட்டு பாஸ்ட் பாசஞ்சர் டிரெயினைப் பிடித்து மறைமலைநகர் போய்ச் சேர்ந்து வேலையை முடித்துவிட்டு வீடுவந்து சேர்வதற்குள் ஒவ்வொரு நாளும் ஆரியக்காண்டமாக நகர்ந்து கொண்டிருக்கும் நமது வேதனையை இவளுக்கு எப்படி விளக்குவது? மனதுக்குள் அச்சுகோர்த்த வார்த்தைகளை நாக்கில் வசனமாக்காமல் மென்று விழுங்கினான், பாலாஜி.
’இல்ல பெரியம்மா, வேலை சரியா இருக்கு. நீ அவசரமா வரச்சொன்னதா அம்மா சொன்னாங்க, அதுதான் வேலைக்கு போகிற வழியிலே பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன்.’ பேசியபடியே கூடத்தை கடந்துச்சென்ற பாலாஜியின் கண்களில்
மாலை அணிவிக்கப்பட்ட ராகவனின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் பட்டது.
அடிக்கடி பார்த்துப் பழகிய படம்தான். ஆனால், அந்தப் படத்தில் போடப்பட்டிருந்த மாலையும், பிரேமின் ஓரத்தில் இப்ப உயிரை விடவா? அப்புறமா உயிரை விடவா? என்றபடி இறுதி மூச்சை வாசப்புகையாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஊதுவத்தியின் புகையும் பாலாஜிக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
தூக்கிவாரிப்போட்டதைப்போல் உணர்ந்த பாலாஜி, ‘என்ன பெரியம்மா? அவன் படத்துக்கு மாலை எல்லாம்போட்டு..’ கேட்டு முடிக்கும் முன்னர் தாய்மை என்னும் அந்த எரிமலை கண்ணீர் கடலாக வெடித்தது. ’அந்தப்பாவி நம்மை எல்லம் விட்டுப்போய் இன்னையோட சரியா ஆறு வருஷமாச்சு, அவன் உயிரோட இருந்திருந்தா என்னை இதுவரைக்கும் நிச்சயமா ஒரேயொரு தடவையாவது வந்துப் பாத்திருப்பான். அட, போன் பண்ணியாவது இருக்கியா? செத்தியா?ன்னு விசாரிச்சிருப்பான்.
ஆனா, அவங்கப்பனைப் போலவே அவனும் காணாத தேசத்துக்கு தலைமறைவாகி ஓடிப்போயிட்டான். இனி அவன் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கிறதா எனக்குத் தோணல்லே, அதுதான் ஆறு வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு அவனுக்கு முதன்முதலா திவசம் பண்ணுறேன். எங்க குலத்துலே மிஞ்சியிருக்கிற ஒரே ஆண்வாரிசு.., அதோட அந்தப்பாவியோட மனசை நல்லா அறிஞ்ச சிநேகிதனான உன்னையும் வைச்சு படையல் போடலாமேன்னுத்தான் உன்னை வரச்சொன்னேன்.
சமையலறைக்குள் நுழைந்த பெரியம்மாவின் துக்க விசும்பல் அவளது ஆறாத-தீராத புத்திரசோகத்தை முழுமையாக பிரதிபலித்தது.
கூடத்தில் இருக்கும் குத்துவிளக்கின் திரியை தூண்டிவிட்ட பாலாஜிக்கு ராகவனின் நினைவலைகள் நெஞ்சத்தில் நிழலாடியது. பத்து வயதை நெருங்கும்போது பெல்பாட்டத்தின் மீது ராகவனுக்கு இருந்த ஆர்வமும், நாட்டமும் பக்கத்துவீட்டு லாவண்யாவின் அரைப் பாவாடையின் மீது திரும்பியது. அவளது ஸ்கூல் யூனிபார்மை அடிக்கடி எடுத்து மாட்டிக் கொண்டு நிலைக்கண்ணாடியின் முன்னேநின்று அழகுப்பார்த்த ராகவனின் சேஷ்ட்டைகளை சாதாரணமான மாற்றுடை அலங்காரப் போட்டியாகத்தான் பாலாஜி அப்போது கவனித்திருந்தான்.
ஆனால், மேல்மாடியில் குடியிருந்த கோமதி ஆன்ட்டியின் சுடிதாரை மாட்டிக் கொண்டு இவன் மொட்டை மாடியில் அலைந்த கதையை தன்னிடம் பெரியம்மா கூறியபோது பாலாஜியால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதுதொடர்பாக, அலமேலுவுக்கும் ராகவனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் சரியாக பிப்ரவரி மாதம் 14-ம் தேதியான காதலர் தினத்தன்று ஒரே உறவான தாயையும் வெறுத்துப் பிரிந்து, ராகவன் வீட்டை விட்டு ஓடும் அளவிற்கு போய் முடிந்தது.
அதன்பிறகு, தனது நண்பர்களில் சிலர் குரோம்பேட்டை பகுதியில் ராகவனைப் பார்த்ததாக கூறியதுண்டு, ஆனால், என்னவோ, அவனைப்பற்றி மேற்கொண்டு அலசி விசாரிக்க வேண்டிய அவசரமோ, அவசியமோ தனக்கு ஏற்பட்டதாக பாலாஜியின் அறிவுக்கு எட்டியதில்லை.
சிறுவயதில் மஞ்சள் பூசிக்கொண்டு, கிராப் வெட்டிய தலையில் டவலை வைத்து பின்னலும், கொண்டையும் போட்டு, ராகவனிடம் தோன்றிய சில மாற்றங்கள் பாலாஜிக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை. அதனால், ராகவனைப் பற்றிய அதீத அக்கறை பாலாஜிக்கு எப்போதுமே இருந்ததில்லை.
ஆவிப்பறக்கும் நெய் கேசரியுடன் அடுக்களையில் இருந்து வெளியே வந்த அலமேலுவின் குரலில் இன்னும் சோகம் தணியாமல் மிச்சம்,மீதி தொற்றிக் கொண்டிருந்தது.
’அந்தப் பயலுக்கு ரொம்பப் புடிச்சமான கேசரி செய்து படையல் போட நெனச்சேன். உனக்கும் கேசரின்னா பிரியமாச்சேன்னு உங்கம்மாவுக்கு போன்பண்ணி இங்க வரவழைச்சேன்’ கேசரியை கிளறிவிட்டபடி மனக்குமுறலை ஆற்றிக் கொண்டிருந்தாள்.
‘இல்ல பெரியம்மா, நான் காலையிலே வீட்டுலே இட்லி சாப்பிட்டுட்டு வந்துட்டேன். ஆபீசுக்கு வேற டயமாயிடுச்சு, கொஞ்சம்போல டிபன்லே போட்டுத் தந்துடு. நான் மதியம் ஆபீஸ் கேண்டீன்லே சாப்பிட்டுக்கிறேன்’ பாலாஜி சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அடுப்பறைக்குள் நுழைந்தாள், அலுமேலு.
வழக்கத்தைவிட அன்று ரெயிலில் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருந்தது. குரோம்பேட்டையில் சிலர் கும்பலாக ஏறினார்கள். சாம்சங்கில் டெம்பிள் ரன் ஆடிக்கொண்டிருந்த பாலாஜியின் கவனத்தை அந்தக் குரல் கலைத்தது.
‘ஏங்கெ, இந்த டிரெயின் செங்கல்பட் போவுதா..?’ அந்த கேள்விக்கு யாரும் பொருட்படுத்தாத மவுனமே பதிலாக அமைந்திருந்தது. ரெயில் கிளம்பி வேகம் எடுக்கத் தொடங்கியபோது, தனக்கு நெருக்கமாக அதேக்குரல்.
’அய்யே, கேக்குறன்ல.., சொல்லுங்களே, இந்த பாய்ஸே இப்படித்தான், கல்நெஞ்சுக்காரப் பசங்க..’ இதற்கு மேலும் பொறுமையாக கேம்ஸ் ஆட முடியாமல் தலைநிமிர்ந்த பாலாஜியின் கண்களில் ஒரு திடீர் மின்னல் வெடித்தது.
இன்று காலை யாருக்காக அலமேலு முதல் திவசம் படைத்தாளோ.., அதே ராகவன் ஆறுமுழ காவிநிறச் சேலையில், கழுத்தில் ருத்ராட்சம் மற்றும் ஸ்படிக மணிமாலைகளுடன் ‘பக்கா திருநங்கை’ கோலத்தில் தனது கண்களின் முன்னே நிற்பதை உணர்ந்த நொடியில் மீண்டும் தலையை குனிந்தபடி செல்போனில் ஏதேதோ நோண்டல்களில் மும்முரமாகிப் போனான், பாலாஜி.
அவனை நெருங்கிவந்து, ‘ஏன்னா, இது செங்கல்பட் போவுமா? என்றபடி பாலாஜியின் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்திய ராகவனின் கண்களிலும் அதே மின்னல், ஆனால், சற்று ஈரத்துடன்.
‘ஏன்டா, பாலா.., என்னைப் பார்த்தும் பார்க்காததுப்போல தலையை குனிஞ்சிக்க உனக்கு எப்படி மனசு வந்தது?’ உரிமையாய் கேட்டபடி, தனது இனத்தவர்க்கே உரிய பாணியில் பாலாஜியின் குமட்டில் பலமாகவும் செல்லமாகவும் வலது கையின் ஒற்றை விரலை மடித்து ஒருகுத்து விட்டான்.
தன்னை யாரும் கவனித்துவிடக்கூடாதே என்ற பதற்றத்திலும், பரபரப்பிலும் சீட்டைவிட்டு எழுந்திருக்க முயன்ற பாலாஜியின் அருகில் இருந்த துணிக்கடை கவரை கையில் எடுத்த ராகவன், உள்ளே இருந்த டிபன் பாக்ஸை வெளியே எடுத்து திறந்தான்.
அவனுக்கு மிகவும் பிடித்தமான கேசரி. அதைத் தின்பதற்கு பாலாஜியின் அனுமதிக்காக காத்திருக்க நேரமில்லை என்பதுபோல், அரை சூட்டுடன் இருந்த கேசரியை கையால் அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். ஒவ்வொரு ரவையிலும் தாயின் கைமணம் வீசுவதை அவனால் ருசிக்கவும் ரசிக்கவும் முடிந்தது.
அம்மாவின் நினைவு இதயத்தை பிளந்துகொண்டு, தொண்டைக்குழியை கிழித்துக்கொண்டு, கண்ணிமைகளில் கண்ணீர் பூச்சரமாக ஊஞ்சலாடியது.
’ஏம்பாலா.., அம்மா, சின்னம்மா எல்லாம் எப்படி இருக்காங்க? நீ எங்கே இருக்கே? என்னப் பண்ணுறே?’ வரிசையாக கேள்விக்கணைகளை தொடுத்துவிட்டு கேசரிக்குள் மீண்டும் சங்கமம் ஆகிப்போனான். இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே கூடுவாஞ்சேரி அருகில் ரெயில் சிக்னலுக்காக நின்றது.
இங்கேயே இறங்கி, மெயின்ரோட்டுக்குப் போய் ஷேர் ஆட்டோ பிடித்தாவது மறைமலைநகருக்கு போய் விடலாம். இவன் தொல்லையில் இருந்து விடுபட்டால் போதும் என்று முடிவெடுத்த பாலாஜி, நின்றிருந்த ரெயிலில் இருந்து கீழே குதித்தான்.
அதற்குள் தன்னுடன் அதே ரெயிலில் ஏறிய சில திருநங்கையரும் அந்த இடத்துக்கு வந்துசேர, தண்டவாளத்தை கவனமாக தாண்டி நடந்துப் போய்க் கொண்டிருந்த பாலாஜியை நோக்கி கேசரிக் கையின் ஆள்காட்டி விரலை பெருமையுடனும், உரிமையுடனும் நீட்டிய ராகவன், ‘ஹி இஸ் மை பிரதர், பாலாஜி’ என்று அறிமுகப்படுத்தினான்.
அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்த பாலாஜிக்கு உள்மனதுக்குள் தவளைகள் துள்ளிகுதிப்பதைப்போல் ஒரு குறுகுறுப்பு.., வாழ்க்கையில் எந்த நிரந்தரமும், உத்திரவாதமும் இல்லாதவர்களால் தங்களது உறவுகளை பிறருக்கு துணிச்சலாக அடையாளம் காட்ட முடிகிறது.
ஆனால், சமூகத்தில் அங்கீகாரம்பெற்ற அங்கத்தினரான ஒருசிலரால் மட்டும் ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ.., மனிதரை மனிதராக மதிக்கத் தெரியாமல் போவது ஏன்? என்ற கேள்வி கடப்பாரையாய் அவன் இதயத்தை துளைத்தது.
காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த கொடிய மிருகங்கள் கூட தங்களின் இனத்தை சேர்ந்த இதர மிருகங்களை காயப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்புவதில்லை.
ஆனால், ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்று தற்பெருமை பேசி வரும் மனித குலத்தை சேர்ந்த நாம் மட்டும் தான் நம்மில் ஒருபிரிவினரை குறைந்தபட்சம் 100 அடையாள பெயர்களால் அழைத்து, தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரையும் குத்தி மனித சமுதாயத்தை விட்டு காலகாலமாக விலக்கியே வைத்துள்ளோம்.
பூர்வஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைப்பயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள், உலகம் முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்படுவதுடன், அற்ப புழுக்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
தாங்கள் செய்தறியாத தவறுக்கு தேவையற்ற தண்டனையை அனுபவித்து வரும் திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத-சொன்னால் விளங்காத-சொல்லி, விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயரத் தொடர்கதையாக இன்னும்கூட தொடரத்தான் வேண்டுமா..?
தனது மனசாட்சியின் குரலை அசைபோட்டு முடித்த பாலாஜி, சற்றுமுன் இறங்கிவந்த ரெயிலை பின்நோக்கித் திரும்பிப் பார்த்தபோது குறுக்கே ஒரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கடந்துப் போய்க் கொண்டிருந்தது. இப்போது சொன்னால் ரெயில் சப்தத்தில் வேறு யார் காதுகளிலும் கேட்காது என நினைத்தவனாய், ‘ஷி இஸ் மை பிரதர்’, ’அது’ என் தம்பிடா.. என்று வேகமாக கூவியபடி, இருமொழிகளிலும் முன்மொழிந்தான்.
Written and Edited by: 
– KuranguKusala@gmail.com
 
Cover Picture Courtesy: Anu Pattnaik


« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !