இன்று கூடி ஆராயவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்
அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆராயவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் நாட்டின் இன ஒற்றுமையை பாதுகாக்கும் வகையிலும் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அரசாங்க தரப்பில் இருந்தும் மகாநாயக்க தேரர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் தெரிவிக்கப்படும் நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆராய இருக்கின்றனர்.
அத்துடன் கூட்டத்தில் சாத்தியமான இணக்கப்பாடு ஏற்பட்டால் அடுத்தகட்டமாக பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டபோதே இறுதி முயற்சியாக அமைச்சுப்பொறுப்புக்களில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்கள் பதவிகளை துறந்து விசாரணைகளுக்கு இடமளித்தோம்.
நாங்கள் பதவி விலகும்போது பிரதமரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இன்னும் முழுமையான உத்தரவாதம் இல்லாமல் இருக்கின்றது. அதேபோன்று ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரைவில் விசாரணை செய்து தீர்வு காணப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம். இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அத்துடன் சிறுவிடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் பலர் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறைகளில் இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் நாங்கள் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொள்வதென்பது பொருத்தம் இல்லை என்றே நினைக்கின் றேன். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி பாரா ளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் போன்றவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
அதனால் இன்று மாலை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஆளுங்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாட இருக்கின்றோம். இந்த சந்திப்பில் குறித்த இருவரும் அவர்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் பிரதமருடன் சந்தித்து தீர்மானம் ஒன்றுக்கு வரமுயற்சிப்போம் என்றார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள் ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இன்று மாலை 2 மணிக்கு கூடுகின்றது. இன் றைய விசாரணைக்குழுவில், காத்தான்குடி சூபிக்குழுவின் தலைவர், காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதி காரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டி ருக்கின்றனர்.