இன்று உலக மனநல தினம்

ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனநலம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும்.

ஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீது கவனம் செலுத்திவருகிறது. இந்த வருடம் உலக மனநல தினம், மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துகிறது.

இன்றைய இளைஞர்கள் பிரச்சினை மிகுந்த ஒரு சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் அவர்கள் இணைய துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதுடன் வன்முறை அல்லது சோகம் நிறைந்த உள்ளடக்கங்களை அதிகமாக பார்க்கவேண்டிய நிலையிலும் உள்ளார்கள்.

அத்துடன் இணையத்தில் சித்திரிக்கப்படும் கனவு வாழ்க்கையை வாழ்வதற்கு முயன்று தோற்கும் பல இளைஞர்கள் மனமுடைந்து போவதும் அதன் விளைவாக அவர்களது மனநலம் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலையும் அதிகரித்துள்ளது.

மனநோயை சமாளிக்கத் தேவையான ஆதரவு மற்றும் கல்வி இன்னமும் இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என மனநல சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

நம் இளைஞர்கள் இன்றைய உலகில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்வான வளர்ச்சியை மேற்கொள்வதற்குத் தேவையானவற்றைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கவேண்டுமெனவும் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

‘நமது இளைஞர்களின் தேவைகளை வலியுறுத்தி இந்த ஆண்டு அனைத்தையும் நாம் பயன்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இவ்வுலகின் எதிர்காலம் இளைஞர்களையே சார்ந்திருக்கிறது என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த வருடத்தின் மனநல தினம் இளைஞர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், இளைஞர்களின் மனநல ஆரோக்கியம், இளைஞர்களின் தற்கொலை மற்றும் இளைஞர்களின் பாலின அடையாளம் குறித்து கவனம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே அதிகரித்துவரும் மனநோயை தடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மனநல ஆரோக்கியம் குறித்து இளைஞர்கள் தெளிவுபடுத்தப்படவேண்டுமெனவும் மனநலம் தொடர்பான ஆதரவு இளைஞர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படவேண்டுமெனவும் உலக மனநல சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !