இனவாதத்தை அரசில்வாதிகள் வியாபாரமாக்கியுள்ளனர் : சர்வமதத் தலைவர்கள்
அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.
தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.
வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.
அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.
இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.
அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.
அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.