இந்தோனேசியாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 31 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாது பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரை புரண்டோடும் வெள்ள நீரால் மண் அரிப்பு மற்றும் சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாகணத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலை பாலங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்தன. சாலை வசதி சரியாக இல்லாததால் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் மீட்பு படையினர் சென்றடைவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி மழைசார்ந்த விபத்துகளில் 31 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 13 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்குழு அதிகாரி அப்துல் ரோஹ்மான் தெரிவித்தார்.