இந்தோனேசியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் : தேர்தலை ஒத்தி வைக்குமாறு மதத்தலைவர்கள், வல்லுநர்கள் கோரிக்கை
இந்தோனேசியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட தேர்தலை ஒத்திவைக்குமாறு மதக் குழுக்கள் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி உள்ளிட்ட வல்லுநர்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
260 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டில் இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தல், வைரஸ் தொடர்பான அச்சம் அதிகரித்தமையினால் எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதிக்கு தாமதபடுத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் குறித்து இன்று திங்கட்கிழமை கருத்து தெரிவித்துள்ள இந்தோனேசிய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக இருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜுசுப் கல்லா, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் ஆபத்தானது என்று கூறினார்.
இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 245,000 கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 9,553 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இது இந்தியாவுக்கு வெளியே ஆசியாவின் அதிக இறப்பு எண்ணிக்கையாகும்.
இந்நிலையில் 107 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதிபெற்ற இந்தத் தேர்தல் தொற்றுநோயைத் மீண்டும் அதிகரிக்கத் தூண்டும் என தொற்றுநோயியல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் அரச மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் மூன்று அமைச்சர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்தோனேசியாவின் மிகப்பெரிய மதக் குழுக்களான நஹ்தலத்துல் உலமா மற்றும் முஹம்மதியாவும் அதிகரித்து வரும் நோயாளிகள் காரணமாக தேர்தலை ஒத்திவைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இருப்பினும் கடுமையான சுகாதார நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி இடம்பெறவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாகா அவரது ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று முடியும் வரை தேர்தலுக்காக காத்திருக்க முடியாது என்று ஜனாதிபதி ஜோகோ விடோடோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.