இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.
அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கமல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் கமல்ஹாசனை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர். அதன்படி இன்று கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜரானார். அப்போது அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.