இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் சிறப்புரை
மாலைதீவில், இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையொன்றை ஆற்றிவுள்ளார்.
இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலைதீவு சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன் மாலைதீவு சென்றடைந்தார்.
நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு மாலைதீவு சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அப்துல்லா ஷகீட் வரவேற்றார்.
மாலைதீவு – சுதந்திர சதுக்கத்தில் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதோடு அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையணியின் மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது.
அத்தோடு இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் நினைவு குறிப்பு புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
மாநாட்டின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அத்தோடு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊடகச் செயலாளர் பியசேன திசாநாயக்க இணைப்பு செயலாளர் மதுஷங்க திஸாநாயக்க மற்றும் மாலை தீவிற்கான இலங்கைத் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.பீ.தொரதெனிய உள்ளிட்ட பலரும் இரு உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் பங்குபற்றினர்.
இநத கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வி மற்றும் சுகாதாரம் என்பன சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய மாலைதீவு ஜனாதபதி இப்ரபஹிம் மொஹமட் சாலி இவற்றை மேம்படுத்துவதற்கு இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரச பல்கலைக்கழகம் ஒன்றின் கிளையை மாலைதீவில் ஸ்தாபிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் வீசா சலுகைகளை வழங்குதல், உயர் கல்வி, வைத்திய பயிற்சி மற்றும் இளைஞர் வளர்ச்சி மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு நாடுகளுக்குமிடையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றும் கைசாத்திடப்பட்டது.
இந்த விடயதானங்களுடன் தொடர்புடைய அமைச்சர்களான வஜிர அபேவர்தன, தயா கமகே, ரவுப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் இலங்கை சார்பில் கைசாத்திட்டனர்.