“இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை“

இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு,  தென்னிலங்கை மீனவர்களின்  அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாவறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது எதிர்ப்புக்கள்  போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும். போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை பல வழிகளில் அபகரிக்கும் நிலை காணப்படுகிறது.

எமது நிலங்கள், கடல்களை சூறையாடும்  நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கெடுபிடி அதிகரித்துள்ளது. கரையோர சட்டங்கள் புதிதாக நடைமுறைப்படுத்தும் நிலையிலும் தென்னிலங்கை  மீனவர்  இந்திய மீனவர் வருகை இப்போது வரை குறையவில்லை. அவர்களின் வரவு அதிகரித்துள்ளது.

இந்திய மீனவரை கைது செய்தல் மற்றும் அவர்களின் படகுகளை  தடுத்து வைத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றாலும் தென்னிலங்கையில் இருந்து வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பற்றி எவரும் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பான சட்டத்தை இயற்றும் போதும் அந்த மீனவர்கள் தொடர்பாக கண்டும் காணாத சூழல் காணப்படுகிறது அதை எம்மால் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

எனவே தென்னிலங்கையில் இருந்து வந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கும் இந்திய மீனவர் வருகையை முற்று முழுதாக நிறுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும்.  இந்த முயற்சி சாதாரணமாகவோ உடனடியாகவோ செய்யக்கூடிய விடயம் என இதை நாம் பார்க்க முடியாது. போராட்டங்கள், எதிர்ப்புக்கள் ஊடாகத்தான் எமது உரிமைகளை பெற முடியும் அதுவே எமது வரலாறாகவும் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும்  தென்னிலங்கை மீனவரின் சட்டவிரோத மீன்பிடி தொழில்  நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !