இந்திய நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது

இந்திய நாட்டின் கடலோர பகுதியில் மூன்றில் ஒரு பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய நாட்டின் கடலோர பகுதி 7 ஆயிரத்து 517 கி.மீ. நீளம் கொண்டது. அதில் 6 ஆயிரத்து 31 கி.மீ. நீள பகுதியை 1990-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டு உள்ளன.

அதில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 29 சதவீத பகுதி புதிதாக இயல்பாகவும், படிமங்கள் மூலமும் சேர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குனர் எம்.வி. ரமண மூர்த்தி கூறுகையில், ஒரு பக்கம் கடலோரத்தில் இருந்து மணல், வண்டல் ஓடிவிட்டால், இன்னொரு பக்கம் எங்கோ ஒரு பக்கத்தில் இருந்து சேர்க்கையும் இடம்பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரிப்பை பொறுத்தவரையில் மேற்கு வங்காள மாநிலத்தின் 63 சதவீத கடலோர பகுதி அரிப்பை சந்தித்து உள்ளது. புதுச்சேரியில் 57 சதவீத கடலோர பகுதியும், ஒடிசாவில் 28 சதவீத கடலோர பகுதியும், ஆந்திராவில் 27 சதவீத கடலோர பகுதியும் அரிப்புக்கு ஆளாகி உள்ளன.இவ்வாறான கடல் அரிப்பிற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு உள்ளது. அரபி கடலோரத்தை விட வங்காளவிரிகுடா கடலோரம்தான் அதிக அரிப்பை சந்தித்து உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !