இந்திய அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மம்தா பானர்ஜியின் மாநாடு

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான திகதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாபெரும் மாநாட்டில் உத்தரப் பிரதேசத்தின் ராஷ்டீரிய லோக் தளம் சார்பில் அஜித் சிங், ஜெயந்த் சவுத்ரி, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன், முன்னாள் பிரதமர் தேவகௌடா, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்கா, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒற்றுமை இந்தியா மாநாடு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாடு பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒரணியில் திரளவைக்கும் முயற்சியாக நடத்தப்படுகிறது.

குறித்த மாநாட்டுக்காக, ஏராளமானோர் இன்று காலையிலேயே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஒன்றுகூடத் தொடங்கி உள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !