இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று பிற்பகல் கூடவுள்ளது .
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயத்தில் மேலும் தவறு செய்ய வேண்டாம் எனவும், இச்சம்பவத்திற்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது எனவும், போர் வேண்டாம் எனவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஐ.நாவின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா – பாக். விவகாரம் குறித்து ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புச் சபை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”
பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்பட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள பிற கடமைகள்இ பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் எதிர்த்துப் போராட வேண்டும்.
நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்‘ என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...