இந்தியா – தென்கொரியாவிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களை சந்தித்தார்.

பொருளாதார மேம்பாடு, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகள் சம்பந்தமாகவே இந்த ஒப்பந்தங்கள் கைசாத்தாகியுள்ளன.

தென் கொரிய ஜனாதிபதிக்கு, இந்திய ஜனாதிபதி மாளிகையில் சம்பிரரதாயப்படி அரச வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அதிகாரிகளுக்கும், தென்கொரிய அதிகாரிகளுக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய பிரதமர் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி ஆகியோர் இணைந்து, கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

இதன்போது கருத்துரைத்த பிரதமர் மோடி,

“கொரிய தயாரிப்பு பொருட்கள் தனித்துவம் வாய்ந்தவை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், தென்கொரியா இணைந்ததன் மூலம் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

இதேவேளை ஊடகவியலாளர்களிடம் பேசிய மூன் ஜே-இன், “இந்தியா – தென் கொரியா இடையே கடந்த 45 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது. நான்காவது தொழில் புரட்சியில் மக்களின் வளம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க மோடியும் நானும் தீர்மானித்துள்ளோம். எதிர்கால வளர்ச்சியை தோற்றுவிக்கும் நோக்கில் இருநாடுகளும் பரஸ்பர ரீதியில் சிறந்த ஒத்துழைப்பை நல்கும்” என்றார்.

தென்கொரிய ஜனாதிபதியாக மூன் ஜே-இன் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும்  முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !