இந்தியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

இந்தியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

ஹமில்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 30.5 ஓவர்கள் நிறைவில் 92 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக யுஸ்வேந்திர சஹால் ஆட்டமிழக்காது, 18 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கொலின் டி கிரெண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 93 என எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 14.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ஆட்டமிழக்காது ரோஸ் டெய்லர், 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக வெற்றிக்கு துணைநின்ற, வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தியா அணி, ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !